தினம் ஒரு பாசுரம் - 68
தினம் ஒரு பாசுரம் - 68
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ,
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ,
திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே,
திணர் ஆர் சார்ங்கத்து உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே?
(திருவாய்மொழி - 6.10.5) - நம்மாழ்வார்
இன்று ஒரு ராம-கிருஷ்ண பாசுரம். ஆழ்வார் திருவேங்கடமுடையானை ராமனாகவும், கண்ணனாகவும் பாவித்து, அனுபவித்து எழுதிய ஓர் அற்புதமான திருப்பாசுரம். ஸ்ரீராமனாகவும், கோகுல கிருஷ்ணனாகவும் பூவுலகில் அவதாரம் செய்த திருமால் தான், கலியுகத்தில் அர்ச்சாவதார கோலத்தில் திருமலை ஸ்ரீநிவாசனாக அருள் பாலிக்கிறான் என்பது ஆழ்வார் தரும் அருட்செய்தியாம்.
மூல வேங்கடவன் திருத்தோள்களில் அம்புறாத் தூணி கட்டிய அடையாளமும், நாணேற்றிய தோள் தழும்பும் இருக்கின்றன. அவன் திருவயிற்றுப் பகுதியில் உரலில் கட்டப்பட்ட தாம்புக் கயிற்றுத் தழும்புகளைக் (அதனால் தான் அவன் தாமோதரன் = தாமம் + உதரன்) காணலாம். ஆக, திருமலை உறை எம்பெருமானே சீதாவின் ராமன், அவனே யசோதாவின் கிருஷ்ணன்!
பொருளுரை:
புணரா நின்ற மரம் ஏழ் - தனித்தனியாக (ஒரு நேர்க்கோட்டில்) நின்ற ஏழு மரங்களை (துளைத்துச்செல்லும் வண்ணம்)
அன்று - அன்றொரு காலத்தில் (இராமாவதாரத்தில்)
எய்த ஒரு வில் வலவாவோ - அம்பெய்த திறமையான வில்லாளனே !
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் - பிணைந்து (இரட்டை மருத மரமாக) நின்ற இரு மரங்களுக்கு
நடுவே போன முதல்வாவோ - இடையே (உரலை இழுத்தபடி நடந்து) சென்ற ஆதி முதல் நாயகனே !
திணர் ஆர் மேகம் எனக் - (நீருண்ட) கனம் மிக்க மேகங்களை ஒத்த
களிறு சேரும் திருவேங்கடத்தானே - (கருமையான) யானைகள் சேர்ந்து திரியும் திருமலையில் எழுந்தருளிய அண்ணலே !
திணர் ஆர் சார்ங்கத்து - வலிமை மிக்க ஸ்ரீசார்ங்கம் எனும் வில்லைத் தாங்கிய (எம்பிரானான)
உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே? - உனது திருவடிகளை அடியேன் அணுகிப் பற்றுவது என்றைக்கோ?
பாசுரக்குறிப்புகள்:
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ,
இராமனின் விற்திறமை, வாலியை வெல்வதற்குரிய வலிமை ஆகியவை பற்றிய சுக்கிரீவனின் ஐயத்தைப் போக்க, அந்த ராகவன் ஒரே அம்பை எய்து ஏழு மராமரங்களைத் துளைத்துச் செல்லும்படி செய்து காட்டிய நிகழ்வை ஆழ்வார் எடுத்தாள்வதில் ஒரு சூட்சமம் உள்ளது :-) "சுக்கிரீவன் ஆனவன் உனது குணபெருமைகளை, ஆற்றலை அறியாதவனாய் உன் மேலேயே சந்தேகம் கொண்டான். அதைப் பெரிதாக எண்ணாமல் அந்த சந்தேகத்தையும் தீர்த்து வைத்த, பெருந்தன்மையும், எளிமையும் மிக்கவன் நீ. உன் பரம அடியவன் ஆன நானோ, துளிச் சந்தேகமும் இன்றி , நீ மட்டுமே கதி என்று நம்பி வந்தவன். எனக்கு மனம் இரங்கலாகாதா?" என்று நம் ஆழ்வார் உள்ளர்த்தமாகச் சொல்வதாகக் கொள்வதில் தான் எத்தனை சுவை !!!
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ,

("பணமுலை ஆயர் மாதர் உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர்,
இணைமருதிற்று வீழ நடைகற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே"
என்ற திருமங்கை மன்னனின் பாசுர வரிகளை நினைவு கூர்க!)
அவை பெயர்ந்து விழுந்ததால், அதுவரை மரங்களாக இருந்த, நாரதரால் சபிக்கப்பட்ட குபேரனின் புதல்வர்கள் சாப விமோசனம் பெற்றனர். அதாவது, எப்படி, எப்போது ஒருவரின் தீவினையை, சாபத்தைப் போக்கி ரட்சிக்க வேண்டும் என்று அந்த மாயனுக்குத் தெரியும் என்பதை ஆழ்வார் குறிப்பில் உணர்த்துவதாகக் கொள்வது தகும்.
முதல்வா - பரந்தாமனே "ஊழி முதல்வன், தனியொரு வித்து, பரம்பொருள், முத்திக்கும் வித்து" என்று உணர்க.
திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே,
இங்கு திருமங்கை மன்னன் திருநெடுந்தாண்டகத்தில், திருமூழிக்களத்துப் பெருமாளை மங்களாசாசனம் செய்த பாசுர வரிகளைப் பார்ப்போம்.
தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபாலதாயினாய் இமையோர்க்கென்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக் களத்தானாய் முதலானாயே.
திருமாலே களிறு போன்றவன் என்கிறார் திருமங்கை ஆழ்வார். தென் திருமாலிருஞ்சோலை மலையிலும், வட வேங்கடத்திலும், குட(மேற்கில்) திருவரங்கத்திலும், குண(கிழக்கில்) திருக்கண்ணபுரத்திலும் என்று நான்கு திசைத் திருத்தலங்களிலும் நின்றும், கிடந்தும் அருள் பாலிப்பவனை நான்கு (வலிமை, பெருமை மிகு) யானைகளாக ஆழ்வார் பார்க்கிறார்.
திணரார் சார்ங்கத்து உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே?
ஆழ்வார் உணர்த்துவது: "உன் கையில் சார்ங்கத்தைக் கண்டவுடன் எனக்கு பரமபதம் கிட்டுவது குறித்த பயம் முழுதும் விலகி விட்டது. அதற்கான தடைகளை நீ உடைத்தெறிவாய் என்ற நம்பிக்கையும் மிகுந்து இருக்கிறது. ஆனால், அது கை கூடி வரும் நாளைச் சொல்லல் ஆகாதா?" ---- இப்படிக் கொள்வதில் சுவை இருக்கிறது தானே!
"புணர்" என்பதற்கு "சேர்" என்பதோடு "புதுமை, சமீபம்" என்ற பொருள்களும் உண்டு.
காதலித்தவளைக் கூட நேராமையால் தலைவன் தனித்துறைந்து வருந்துதலைக் கூறும் புறத்துறைக்கு "புணராவிரக்கம்" என்று பெயர்.
வலவன் = திறமையுடையவன்; வெற்றியாளன்; தேர்ப்பாகன்; திருமால்; வலப்பக்கத்து உள்ளவன்; ஓர் அசுரன்
"திணர்" என்பதற்கு செறிவு, மிகுதி. நெருக்கம், அடர்த்தி, வலிமை; உறுதி, பருமன், கனம் என்று பல பொருள்கள்.
"ஆர்" என்ற இரண்டெழுத்துச் சொல்லுக்கு இத்தனை பொருள்கள் உள்ளன. நம் தமிழ் தான் எத்தனை பெருமைக்குரியது!
நிறைவு; பூமி; கூர்மை; அழகு; மலரின்பொருத்துவாய்; காண்க:ஆத்தி; திருவாத்தி; ஆரக்கால்; தேரின் அகத்தில் செறிகதிர்;அச்சுமரம்; செவ்வாய்; சரக்கொன்றை; அண்மை; ஏவல்; பலர்பால்படர்க்கைவினைமுற்றுவிகுதி; மரியாதைப் பன்மைவிகுதி; ஓர்அசை; அருமையான.
---எ.அ.பாலா
4 மறுமொழிகள்:
அழகான எளிய பாசுரத்துக்கு உங்கள் இனிய விளக்கம்.
ஒரு சிறிய விளக்கம் தோன்றுகிறது. இது நய விளக்கம் மட்டுமே.
புணரா நின்ற ஏழ் மரம் என்பது இறைவனோடு ஒன்றாமல் நின்ற ஏழு பிறப்புகளையும் குறிக்க.. அந்த ஏழு பிறப்பிலும் துளைத்து உள்ளிருந்த ஒரு பொருளாகிய இராமனும்...
ஆணும் பெண்ணுமாய் புணரும் அந்தக் கலவியின் ஊடே குழந்தையாய்த் தவழும் கண்ணனும்.. திருவேங்கடத்தானே!
சைவத்தில் பொதுவாக பிறக்கும் எல்லாக் குழந்தையாகவும் முருகனே இருக்கிறான் என்று ஒரு கருத்து உண்டு. அதைத்தான் அருணகிரி “நாதவிந்து காலாதீ நமோ நம” என்று அருணகிரியும் “உலகிலாடும் தொட்டிலெல்லாம் உன் புகழ் பாடும்.. சொல்லச் சொல்ல இனிக்குதடா” என்று கண்ணதாசனும் பாடியிருக்கிறார்கள். அதை வைத்து மேலே சொன்ன நயத்தை எழுதினேன்.
அருமை
புதிய கோணத்தில் நல்ல விளக்கம் ஜிரா. ஒரு பாசுர வரிக்கு இறைவன் நம் மனத்தில் புகுந்து எத்தனை வித விளக்கங்கள் தர வைக்கிறான்!
அருமையான பாசுரம். திருவேங்கடவன் கலியுக வரதன். திரேதா யுக துவாபர யுக அவதாரங்களான இராமனும் கிருஷ்ணனும் கலி யுகத்தில் ஒரு சேர ஸ்ரீநிவாசரிடம் குடி கொண்டுள்ளார்கள். அவன் திரு நாமமே நம்மை உய்விக்கும் அருமருந்து!
amas32
Thanks for the pasuram.
I would like to share the pasuram and its meaning with my friends.
Thanks,
With warm regards,
R.Sridhar
Post a Comment